![nirmala seetharaman](http://image.nakkheeran.in/cdn/farfuture/hGRq07ZeINP8HU4tktQplhQFL7FVnITMr1DZqALum0s/1541199998/sites/default/files/inline-images/nirmala-seetharaman.jpg)
பொதுத்துறை வங்கிகளில் உடனடியாக கடன் பெற விண்ணப்பிக்கும், "PSB loans in 59 minutes portal" என்ற இணையதள சேவையினை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுடில்லி விஞ்ஞான்பவனில் துவக்கி வைத்தார். இதையொட்டி கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் இந்த நிகழ்ச்சியை சிறு,குறு,நடுத்தர தொழில் முனைவோர் நேரலையாக பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரலை நிகழ்ச்சி துவங்கும் முன்பாக பேசிய அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்தார். 59 நிமிடத்தில் வங்கி கடன் கிடைக்கும் இந்த திட்டம் தொழில்முனைவோருக்கு பயனுள்ள வகையில் இருக்கும் எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நமது நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சியில் 28.7 சதவீதம் சிறு, குறு, தொழில்களின் பங்கு இருப்பதாக தெரிவித்தார். மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஏற்றுமதியில் 25 சதவீதம் பங்கு வகிப்பதாகவும், உற்பத்தி துறையில் ஜி.டி.பியில் 6 சதவீதம் வகிப்பதாகவும் தெரிவித்த மத்திய அமைச்சர், சிறு, குறு தொழில்களில் 20 மில்லியனுக்கும் மேலாக தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். சின்னச்சின்ன தொழில்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கின்றது என தெரிவித்த நிர்மலா சீதாராமன், நாட்டின் இயற்கை வளத்திற்கு உகந்த்தாக சிறு, குறு தொழில்கள் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
பல்வேறு அமைச்சகத்தின் கீழ் இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதை நிதித்துறையின் கீழ் கொண்டுவந்து மத்திய அரசின் அனைத்து பலன்களையும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். நாடு முழுவதும் 100 கிளஸ்டர் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, தமிழகத்தில் கோவை, திருவள்ளூர், மதுரை, திருச்சி உட்பட 7 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் மத்திய அமைச்சர், மத்திய அரசு அதிகாரி, மாநில அரசு அதிகாரி ஆகியோர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு, மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் சிறு, குறு, நடுத்தர தொழில்களும் சென்று சேர்கின்றதா என்பதை உறுதி செய்யவும், அதை மேம்படுத்த இருப்பதாகவும், சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்காக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார் எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த திட்டங்களின் ஒரு பகுதியாகவே 59 நிமிடத்தில் லோன் கிடைக்கும் திட்டத்தை பிரதமர் இன்று துவங்கி வைக்கின்றார் எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.