![Seeman appeared in the Erode court](http://image.nakkheeran.in/cdn/farfuture/1IlW3BsEDk5KJ97faW-y7XDN7kw7KdmUEXO-ldM8HDo/1694441843/sites/default/files/inline-images/a1439.jpg)
அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல இடங்களில் வாக்கு சேகரித்தார். பிப்ரவரி 13 ஆம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு சில அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று காலை ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். அவருடன் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார். பின்னர் மீண்டும் பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அக்டோபர் 10 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.