
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சி மீண்டும் பிரமாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விளையாட்டரங்கில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிய உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியானது தற்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் நிறைவு விழா மீண்டும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா மேடைக்கு வருகின்ற வழியில் சென்னை ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் என்பவர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் கழிவறைக்குச் சென்ற செந்தில்குமார் வெளியே வரவில்லை. திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்த மற்ற காவலர்கள் ஓடிச் சென்று கதவை உடைத்துப் பார்த்தனர். அப்பொழுது செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ஆயுதப்படை காவலர் செந்தில் குமார் தன் கையில் வைத்திருந்த எஸ்எல்ஆர் ரக துப்பாக்கியை கொண்டு நெஞ்சில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த சில தினங்களாக மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் செந்தில்குமார் மன உளைச்சலிலிருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக மேலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதேபோல் கடந்த 26 ஆம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் இருக்கும் செந்தில்குமார் விடுப்பு கிடைக்காத சூழலில் இருந்ததால். அது அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.