நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கனகராஜை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் கனகராஜ் அழைத்து வந்த கூலிப்படையைச் சேர்ந்த 10 பேரையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாகச் சில ஆவணங்களை கனகராஜின் சகோதரர் தனபால் அழித்ததாகக் காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இது சம்பந்தமாக, கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள சிபிசிஐடி போலீசார் முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மற்றொரு முன்னாள் கார் ஓட்டுநர் ஐயப்பன் இன்று காலை ஆஜரானர். இவரிடம் சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா மறையும் வரை அவரது கார் ஓட்டுநராக பணியாற்றியவர் ஐயப்பன். அதே சமயம் சசிகலா சிறையில் இருந்து திரும்பும் வரை அவர்களது கார்களை பராமரித்து ஒப்படைக்கும் பணியிலும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.