கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக குளச்சல், கடியபட்டணம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு, மேல் மிடாலம், இரயுமன்துறை, குறும்பனை, முட்டம் கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு வெகுண்டெழுந்த ராட்சத அலைகளால் ஊா் மற்றும் தென்னம் தோப்புகளில் கடல் நீர் புகுந்து நாசமாக்கியது. இதில் கடியப்பட்டணத்தில் 14 வீடுகள் சேதமடைந்தன. மேலும் அழிக்கால் பிள்ளைத்தோப்புகளில் மண் சரிவு ஏற்பட்டு தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மேலும் அழிக்காலில் இருந்து முட்டம் செல்லும் சாலைகளில் கடல் மணல் மேடு ஏற்பட்டு இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு்ள்ளது. எப்போதும் ஏப்ரல் மே மாதங்களில் கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கடல் சீற்றமும் அலையும் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
நேற்று இரவு அலையின் வேகமும் கடல் உள்வாங்குவதும் அதிகமாக இருந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் 29-ம் தேதி புயல் எச்சரிக்கை விடபட்டு இருப்பதால் அச்சத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராம மக்கள் கரை பகுதியில் உள்ள அவர்களின் உறவினர் வீடுகளுக்கு இன்று காலை முதலே தஞ்சம் அடைந்து வருகின்றனர்.