பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 06 அன்று ‘பாசிச எதிர்ப்பு தினம்’ என்கிற பெயரில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
டிசம்பர் 6ம் தேதி சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் 1992ம் ஆண்டு பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பெரும் கலவரங்கள் நடந்தேறின. இந்தக் கலவரங்களில் பல்வேறு தரப்பு மக்கள் சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். அதில் இஸ்லாமியர்களே அதிகம் உயிரிழந்தனர். அன்று முதல் இன்று வரை டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ம் தேதி நாடு முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாட்டுத் தலம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் அடையாள ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி மயிலாடுதுறையில் 6ம் தேதி காலை 10 மணியளவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ‘பாசிச எதிர்ப்பு தினம்’ எனும் பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அக்கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் ஆத்தூர் அ.பைசல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது ரஃபி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் முஹம்மது ரவூப் தொகுப்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாசில் கண்டன முழக்கங்களை எழுப்பினார். மயிலாடுதுறை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் அப்துல் சாதிக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விழுப்புரம் மண்டல செயலாளர் ஹமீது பரோஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தே.மகேஷ், தமிழர் உரிமை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் சுப்பு மகேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றிய; மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.