
கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிற நிலையில் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த வருகின்றனர். அதேசமயம் சம்மந்தப்பட்ட பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் 3 பேரும், பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை நடந்து வருகிறது. மறுபுறம் காவல்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பள்ளியில் நடந்த கலவரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கலவரத்திற்கு காரணம் சமூகவலைத்தளங்களில் வெளியான தவறான தகவல்களே என கூறியுள்ள காவல்துறை, போலி செய்திகளை பரப்பிய சில யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட பல சமூகவலைதள பக்கங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பள்ளி பேச்சு போட்டியில் அபாரமாக தமிழில் பேசும் வீடியோ ஒன்று உயிரிழந்த பள்ளி மாணவி பேசிய வீடியோ என தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில், போலியான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளி பேச்சு போட்டியில் அபாரமாக தமிழில் பேசும் வீடியோ ஒன்று பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது. 'இவ்வளவு தெளிவாக பேசும் மாணவி எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும்' என தலைப்பிட்டு அந்த வீடியோவானது பகிரப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 66 ஆயிரம் பேர் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை அறியாமல் வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஆனால் அந்த வீடியோவில் பேசுவது கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி அல்ல, கோவையைச் சேர்ந்த வேறு பள்ளி மாணவி என்பது தெரியவந்துள்ளது.
கோவை மாணவி இது குறித்து தெரிவிக்கையில், ''மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பு ஏற்றுக்கொள்ளமுடியாதது. அவரது பிரிவை நினைத்து இன்று வரை நாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையை தவறா பயன்படுத்தி நான் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோக்களை அவர் பேசியதாக எடுத்து தவறாக பரப்பியுள்ளனர். நீங்கள் பல பெண் சாதனையாளர்களை, பெண் மேதைகளை உருவாக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த சமூகத்தில் இன்னும் பல ஸ்ரீமதிகளை உருவாக்கி விடாதீர்கள் அதுவே போதும்'' என அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பரப்பியவர்கள் மீது கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரித்து வரும் போலீசார் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.