தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்த நிலையில் தமிழக முழுவதும் இன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பபட்டுள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் இன்றைய நாளிலேயே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பஸ் பாஸ் விநியோகிக்கப்படாத நிலையில் மாணவர்கள் அடையாள அட்டையை வைத்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி பல்வேறு இடங்களில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி திறந்த முதல் நாளான இன்று திருவண்ணாமலையில் தனியார் பள்ளி வேனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்கள் உடனடியாக வேனிலிருந்து இறக்கி விடப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.