வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகிறது. வாணியம்பாடி அடுத்த தும்பேரி, வாணியம்பாடி பைபாஸ் சாலையில் இருந்த டாஸ்மாக் மதுபானக்கடையால் பல பிரச்சனைகள் ஏற்பட்டன.
அதாவது, குடிமகன்கள் மதுபாட்டில் வாங்கி சென்று அருகில் உள்ள விளைநிலங்களில் அமர்ந்து குடித்தப்பின்னர் பிளாஸ்டிக் கிளாசுகள் மற்றும் பாட்டில்களை நிலத்திலேயே வீசி செல்வதால் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இரண்டு கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக குடிமகன்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வாணியம்பாடி நகரத்தை சுற்றியுள்ள சி.வி.பட்டரை, கிரிசமுத்திரம், இந்திராநகர், வளையாம்பட்டு, நேதாஜி நகர், ராமையன் தோப்பு, தும்பேரி, இளையநகரம், திகுவாபாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்கப்பட்டு வருகின்றன. அதுவும் பாக்கெட் சாராயமாக விற்பனையாகின்றன.
இதனால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர். காவல் துறையினர் கண்டும் காணாமல் உள்ளதாகவும், மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகம் வாணியம்பாடியில் இருந்தும், எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுப்பதில்லை எனவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆந்திரா பகுதியில் காய்ச்சி கேன்களில் நிரப்பி கொண்டுவந்து, இங்கு பாக்கெட் செய்து ஒரு பாக்கெட் 50 ரூபாய் என விற்கின்றனர். இதனை உடனே தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர் .