Skip to main content
சற்று முன்

தலித்துகள் மீது தொடரும் தாக்குதல்! நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: சிபிஎம் எச்சரிக்கை


communist


தலித்துகள் தொடர்ந்து தாக்குதல் தொடுப்பவர்கள் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் எச்சரித்தார்.

இதுகுறித்து நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

கொலை, கொள்ளை, வழிப்பறி என புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடாந்து சமூகவிரோதச் செயல்கள் அதிகரித்து வருகிறது. சாதி ஆதிக்க வெறியர்களால் தலித்துகள் மீதான தாக்குதல் சமீப காலங்ளில் அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டையைச் சேர்ந்த எங்கள் கட்சியின் மாவட்டக்கு உறுப்பினர் ஆர்.வாசு. இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஊரணிபுரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையை பேசித் தீர்த்து வைத்ததற்காக சாதி ஆதிக்க வெறியர்கள் கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். வாசு தலித் என்பதன் காரணமாகவே இத்தகைய தாக்குதல் தொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வாசு கொடுத்த புகார் மனுமீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக வாசு உள்ளிட்ட தலித்துகள் மீதும் பொய்வழக்குப் பதிவுசெய்து பழிவாங்குகிறது காவல்துறை.

பழைய கந்தர்வகோட்டையில் மாட்டுப் பொங்கல் திருவிழாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மாடுகளை அவிழ்த்து விட்ட பிறகே தலித்துகள் அவிழ்த்துவிடுவது வழக்கமாக இருந்துள்ளது. கடந்த பொங்கலன்று பிற்படுத்தபட்ட வகுப்பினரின் ஒரிரு மாடுகள் பாக்கி இருக்கும்போது வெடிச்சத்ததைக் கேட்டு மிரண்டதால் தலித் வீட்டில் நின்ற ஒரு மாடு அவிழக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் தலித்துகளின் வீடுகளுக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் இரண்டு தரப்பினரிடமும் புகார் பெற்றுக்கொண்டு சமாதானமாகப் போகும்படி காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்துப் பேசுகின்றனர்.

இதேபோல, புதுக்கோட்டையை அடுத்து மேலூர் கிராமத்தில் பொங்கல் திருவிழாவை ஒலிபெருக்கி வைத்து தலித்துகள் கொண்டாடியதைப் பொருத்துக்கொள்ள முடியாமல் சாதி வெறியர்கள் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதிலும் காவல்துறையினரின் நடவடிக்கை பாரபட்சமாகவே இருந்துள்ளது. அன்னவாசல் ஒன்றியம் பேயால் வலையபட்டியில் நடைபெற்ற அன்னதான விழாவில் தலித் இளைஞர்கள் கைலியை மடித்துக்கட்டித் திரிந்ததற்காக அவர்களை அரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர்.

ஆலங்குடியை அடுத்து மேலநெம்பக்கோட்டை, வெள்ளாகுளம் உள்ளிட்ட இடங்களில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதியரை பிரித்து வைக்கும் முயற்சியில் ஆதிக்க சாதியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வட மாநிலங்களில் ‘காப’ என்ற பெயரில் காதலர்களை சித்திரவதை செய்வது, அபராதம் விதிப்பது, கொலை செய்வது நடைமுறையாக உள்ளது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ‘நாடு’ என்ற பெயரில் இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றும் நடவடிக்கை இருப்பது தெரிய வருகிறது.

சாதிமறுப்பு திருமணம் செய்தவர்களைப் பாதுகாக்கும் விதமாக கடந்த 2012-ல் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அரசு தாக்கல் செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் நபர்கள்மீது காவல்துறையினர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலத்துறை முறையான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும் என்றார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு போதுமான அளவிற்கு நிவாரணம் வழங்கவில்லை. இதில், விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். நிகழாண்டிலும் தமிழகம் கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக வேலையும், சம்பளமும் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி மார்ச் மாதம் பல்வேறு அமைப்புகளை இணைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு உள்ளோம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் தான் அவரது படத்தை தமிழக சட்டப்பேரவையில் வைத்ததற்கு எதிர்க்கிறோம். அவரோடு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இல்லையென்பதால் சிறையில் இல்லை. அவ்வளவுதான். குற்றவாளிகளில் ஆண், பெண் எனப் பிரித்துப்பார்க்க முடியாது. ஜெயலலிதாவின் படத்தை வைப்பதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே எதிர்க்கிறோம் என்றர். பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.ஜீவானந்தம், செயலாளர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

- இரா.பகத்சிங்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்