திருச்சியில் நடைபெற்ற மாநில கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்கும் கூட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், பி.டி பீரியட்டை கடன் வாங்கி வேறு யாரும் பாடம் எடுக்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கல்விக் கொள்கை தொடர்பான, மண்டல அளவில் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், உயர்கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
அந்த வகையில் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், “கல்விக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, விளையாட்டிற்கும் கொடுக்க வேண்டும். ஆனால் விளையாட்டு பீரியட்டை கடன் வாங்கி மற்ற ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்கள். அப்படி யாரும் எடுக்கக் கூடாது. விளையாட்டு பீரியட்டில் மாணவர்களை விளையாட விட வேண்டும்” என்றார். அத்துடன் பள்ளிகளில் தரமான மதிய உணவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி, தங்களின் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இதனை அரங்கத்தில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.