நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு கிராமம் மலையடிவார பகுதியாக இருப்பதாலும், விவசாயத்தை அடிப்படையாக கொண்டிருப்பதாலும் கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி இப்பகுதியில் “விசிட்” அடிப்பது வழக்கம்.
கடந்த மாதம் இக்கிராமத்திலுள்ள அண்ணா நகர் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக அம்பாசமுத்திரம் வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் அப்பகுதியை சேர்ந்த ராமர் வீட்டருகே கண்காணிப்புக் கேமராவைப் பொருத்தினார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி, ராமர் வீட்டிலிருந்த ஆடு வனவிலங்கு தாக்கி இறந்த கிடந்தது. வனத்துறையினர் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், ராமர் வீட்டருகே சிறுத்தை வருவதும், அங்கிருந்த ஆட்டை கொன்று தின்ற காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தன.
இதனையடுத்து, கடந்த மாதம் 10ம் தேதி அண்ணா நகரை ஒட்டியுள்ள “குமளம்” பொத்தை அடிவாரத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, அதில் வெள்ளாட்டைக் கட்டி கண்காணித்து வந்தனர். இப்பணியில் வனத்துறையினர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
வழக்கம் போல், நேற்று முன்தினம் மாலை கூண்டில் வெள்ளாட்டை கட்டிவிட்டு வன உயிரின காப்பாளர் ஸ்டீபன் ஞானராஜ், வனக்காப்பாளர் ராமர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள், நேற்று அதிகாலையில் கூண்டில் சிறுத்தை சிக்கியதைப் பார்த்தனர். இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் ரேஞ்சர் கார்த்திகேயன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை காட்டிற்குள் விடும் முயற்சியில் இறங்கினர்.
இதற்கிடையில், கூண்டில் சிறுத்தை சிக்கியதை அறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பயிற்சி போலீசார் அப்பகுதியில் திரண்டனர். அவர்கள், சிறுத்தையை மொபைலில் படம் எடுக்க முயன்றனர். அதை தடுத்த வனத்துறையினர் அவர் சிறுத்தையை பார்க்க அனுமதித்தனர். மீறி படமெடுத்த மொபைல்களை வனத்துறையினர் பிடுங்கி படத்தை அழித்தனர். சிலர், சிறுத்தையை பார்க்கக் கூண்டருகே சென்ற போது, சிறுத்தை ஆத்திரமடைந்து உறுமி பாய்ந்தது. சில தருணங்களில் கோபத்தில் கூண்டிற்குள் கிடந்த ஆட்டைக் கடித்து கோபத்தை வெளிப்படுத்தியது. இதற்கிடையில், டிராக்டர் வந்தது. அதில், சிறுத்தைக் கூண்டை ஏற்றி முண்டந்துறைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து அம்பாசமுத்திரம் ரேஞ்சர் கார்த்திகேயன் கூறுகையில் கூண்டில் சிக்கியது இரண்டு முதல் மூன்று வயதுக்குள் உள்ள பெண் சிறுத்தைக் குட்டி. இச்சிறுத்தை குட்டி ரிசர்வ் பாரஸ்ட் பகுதியில் விடப்படுகிறது என்றார். பிடிபட்ட சிறுத்தை கன்னிகட்டி பகுதியில் விடப்பட்டது.
பிடிபட்ட சிறுத்தைக் குட்டியை பார்க்க வந்திருந்த ராமர் மனைவி அந்தோணி அம்மாள் கூறுகையில், 8 ஆடுகளை சிறுத்தைக் கொன்று தின்றுள்ளது என்றார். அவரது பக்கத்து வீட்டு இளம் பெண் பேச்சியம்மாள் கூறுகையில், ஒரு மாதமாக அச்சத்தில் இருந்து வந்தோம். வேலைக்கு செல்ல கூட பயந்தோம். இரவு 7 மணிக்கு மேல் கதவை அடைத்து கொண்டு வீட்டிற்குள் இருந்தோம். இப்போது, சிறுத்தை பிடிபட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
இதற்கிடையில், பாதுகாக்கப்பட்ட வன பகுதியிலோ இல்லது அதன் அருகிலோ வன விலங்குகளை கூண்டு வைத்துப் பிடிப்பதும், அதை அதன் வசிப்பிடத்தில் இருந்து வேறு ஒரு இடத்தில் விடுவதும் வன உயிரின சட்டத்திற்கு எதிரானது என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டடு வருகின்றன.