புதிதாக கட்டப்பட்ட காவல்நிலையத்தில் முதல் வழக்கினை என்மீது பதிந்து கைது செய்யுங்கள் என விவசாயி ஒருவர் கண்ணீர்க் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் புதிதாக காவல்நிலையம் கட்டப்பட்டு திறப்புவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் ஐ.ஜி. உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். காவல்நிலையத்தைத் திறந்துவைக்க கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விழா தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, 10கிலோ சந்தனமரங்களுடன் அங்கு வந்த ஒருவர், இவையனைத்தும் திருட்டு மரங்கள் எனக் கூறி, தன்னைக் கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். காவல்நிலையத்தின் திறப்புவிழா அன்றே நல்ல வழக்கு சிக்கியிருப்பதாக காவல்துறையினரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
சந்தனக் கட்டைகளுடன் வந்திருந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் கந்தம்பாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரியவந்தது. ‘சத்தியமங்கலத்தில் உள்ள சந்தனமர டிப்போவிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் சொந்த நிலத்தில் வளர்த்த 400 கிலோ சந்தன மரங்களை வனத்துறை அனுமதியுடன் விற்றேன். ஆனால், அதற்கான தொகையை இன்னமும் அரசுதரப்பு வழங்கவேயில்லை. எனவே, அமைச்சரின் கவனத்தைப் பெறவே இவ்வாறு செய்தேன்’ என செய்தியாளர்களிடம் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர், அதை சமூக சேவை பதிவாளரிடத்தில் சமர்ப்பித்துள்ளனர்.