பழங்குடியின மற்றும் பட்டியலின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 3/12/2021 அன்று வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியான நிலையில், நேற்று (20.12.2021) இதுதொடர்பாக கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
கடந்த 2011 முதல் 2014 வரை எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் 17.36 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் தகவல் வெளியாகியிருந்தது. சுமார் பத்து விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. இந்த விவகாரத்தில் பாலிடெக்னிக், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 52 கல்லூரி முதல்வர்களுக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இன்றுமுதல் இந்தப் புகார் தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது. சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் தலைமை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் வேணுகோபால் தலைமையில் விசாரணை நடந்துவருகிறது. இதுதொடர்பாக 52 கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தற்போதுவரை 6 கல்லூரி நிர்வாகிகள் ஆஜராகியுள்ளனர். ஆஜரான 6 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்றுவருவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு ஆஜரானவர்களின் விவரங்களைப் போலீசார் வெளியிடவில்லை.