கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல், நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளன நிலையில், அவரது உடல் தற்பொழுது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கலைத்துறையில் அவருடன் பணியாற்றியவர்கள், பயணித்தவர்கள் என அனைவரும் தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ''அவரது மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தனது பாடல்கள் மூலம் மக்களின் துயரைத் துடைத்தெறிந்தவர், இன்றைக்கு நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்தி சென்றிருக்கிறார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். அவரது மறைவு இசை உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு. மண்ணை விட்டு மறைந்தாலும் காற்றில் கலந்த அவரது கானங்கள் மூலம் காலங்கள் கடந்தும் வாழ்ந்து கொண்டுதானிருப்பார் எஸ்.பி.பி" எனத் தெரிவித்துள்ளார்.