பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக வாழ்க்கை நடத்தி வந்த எஸ்.வி.சேகர், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், கைது செய்யாமல் இருப்பது ஏன் என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பியது. அவரது உறவினரான தலைமைச் செயலாளர்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
சென்னையிலேயே தலைமறைவாக இருந்த எஸ்.வி.சேகர், தனக்கு வேண்டியவர்கள் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்போடு சென்று வந்தார். சென்னையில் நடந்த தனது நண்பர் தேவநாதன் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றதோடு, அந்த விழாவில் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் சந்தித்தார். போலீஸ் தேடும் நபரை நீங்கள் சந்தித்தீர்களே என்றதற்கு, அவரைக் கைது செய்யவேண்டியது போலீஸ் வேலை. அவரை பிடித்துக் கொடுப்பது என் வேலையில்லை என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
மத்திய அமைச்சரின் பதிலைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் எஸ்.வி.சேகருக்கோ கூடுதல் தைரியம் உண்டானது, மகிழ்ச்சியாக இருந்தார். முதல் அமைச்சரை சரிக்கட்டிரலாம், ஆனால் வளர்ந்த முடியை சரிகட்ட முடியாதே? இத்தனை வாரங்களில் தலைமுடி வளர்ந்துவிட, சிகையலங்காரம் செய்ய நினைத்தார் சேகர். இன்ஃப்ளூயன்ஸைப் பயன்படுத்தி போலீஸை சரி பண்ணியாச்சி... அப்புறம் என்ன கடையில போயி முடியை வெட்டுவோம் என நினைத்த எஸ்.வி.சேகர், மே 23 புதன்கிழமை காலை 10 மணிக்கு மந்தைவெளியில் உள்ள 'தி டெனிம் பார்ல'ருக்கு சென்றார்.
'ரொம்ப தைரியம் சார் உங்களுக்கு... ஒரு பக்கம் போலீசு உங்கள தேடுவதாக சொன்னாங்க... ஆனா நீங்களோ அதே போலீஸ் பாதுகாப்போட வந்திருக்கீங்க...' என்றார்களாம் பார்லர் ஊழியர்கள்.