உயிரின் மதிப்பை உணராத சாத்தூர் நகராட்சி நிர்வாகத்தால், அநியாயமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழக்க நேரிட்டுள்ளது.
சாத்தூரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கான குழாய்களைப் பதிக்கும் வேலையில், 30- க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த ஒரு வருடமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (16/07/2022) சனிக்கிழமை இரவில், சாத்தூர் நகர் முக்குராந்தலில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டும் பணியை, சின்னசேலம் – குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 7 ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்தனர். பகல் நேரத்தில் வேலை செய்தால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு மக்களுக்கு இடையூறு உண்டாகும் என்பதாலேயே, இரவு நேரத்தில் வேலை பார்த்தனர்.
குழிதோண்டியபோது மண் சரிந்து விழுந்து, தோண்டிய குழிக்குள் சக்திவேல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு தொழிலாளர்களும் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டனர். உடனே, சாத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்து, சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஜேசிபி மூலம் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, புதைந்த இருவரையும் தீயணைப்புத்துறையினர் சடலங்களாக மீட்டனர்.
முதலில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட இருவரது உடல்களும், அங்கிருந்து விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது, விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. பாதாளச் சாக்கடைக்கான பணிகள் நடைபெற்ற போது, உயிர்காக்கும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், இருவர் உயிரிழந்திருக்க மாட்டார்களே? எனக் கேள்வியும் எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.