தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று (17-01-24) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஏராளமான நிகழ்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், வி.கே.சசிகலா எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு தனது இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இப்போது தமிழகத்தில் நடக்கக்கூடிய ஆட்சியால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கின்றனர். திமுகவை வீழ்த்த அதிமுக அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரிந்து கிடந்த அதிமுக முன்பு, எப்படி ஒன்றாகி பலம் பெற்றதோ, அதே போல் தற்போது பிரிந்து கிடக்கும் அதிமுகவை விரைவில் நான் ஒன்று சேர்ப்பேன்.
நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று போட்டி போட்டுக்கொண்டு கட்சியையும், தொண்டர்களையும் மறந்துவிட்டதாக அதிமுக தொண்டர்கள் எண்ணுகிறார்கள். கட்சி பிளவுபட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். செவிடன் காதில் ஊதிய சங்கு போல தொடர்ந்து போக முடியாது. பிறகு தொண்டர்கள் கொதித்தெழுவார்கள். எல்லோரும் ஒன்று சேர்வதே நம் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நாம் செலுத்திய பெரிய நன்றிக்கடன்” என்று கூறினார்.