தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியின் ஆலோசனை கூட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சினிவாசன், சசிகலா கொள்ளை அடித்ததால் மன வேதனையில் ஜெயலலிதா இறந்தார் என பேசினார்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தேனி எம்.பி பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ முருகுமாறன் மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ... "ஜெயலலிதா ஏன் சிறை சென்றார். அவருக்கு கொள்ளை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தினகரனால் தான் அவர் சிறை சென்றார்." என காட்டமாக பேசினார். தொடர்ந்த அவர், "ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. நல்ல மருத்துவம் பார்த்தால் என்ன? சசிகலா கொள்ளை அடித்ததால் மன வேதனையில் ஜெயலலிதா இறந்தார். ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்தவரின் உறவினர் தானே தினகரன். இங்கு இருப்பவர்களை ஸ்டாலின் இழுக்கப்பார்க்கிறாராம். அது முடியாது. ஸ்டாலினை முதல்வராக ஆக்குவேன் என்கிறார் வைகோ. நான் அவரிடம் பேசும் போது, ஏன்ணே... டெப்பாசிட் வாங்கும் கட்சியோடு சேரமாட்டீங்களா? என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்." என்று கூறினார்.
ஆனால் கூட்டம் ஆரம்பித்த உடன், மக்கள் எழுந்து சென்றனர். மதியம் 2மணிக்கு அழைத்துவந்து இப்போதுவரை ஒரு டீ கூட கொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டே வெளியேறிச்சென்றனர். இதனால், மேடையில் அமர்ந்திருந்த ஓ.பி.எஸ், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய போது..ஜெயலலிதா ஆன்மா தேர்தலில் வெற்றிபெறச் செய்யும். இன்று தங்கத்தமிழ்ச்செல்வன் இருப்பார். நாளை காணாமல் போய்விடுவார். அ.தி.மு.க வை காக்கும் இரு கரங்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ். என்று கூறினார். கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.