திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே பேரணை வைகை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. சித்தர்கள் நத்தம் முதல் விளாம்பட்டி வரையிலான வைகை ஆறு மணல் கொள்ளையால் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. அரசு அதிகாரிகளின் துணையுடன் ஆளும் கட்சியினர் அடங்காத மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வைகை ஆற்றில் மணல் அள்ள தடை விதித்து உத்தரவிட்டது. இருப்பினும் எதையும் பொருட்படுத்தாத அதிமுக கட்சியினர் இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு 50க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல்களை அள்ளி வருகின்றனர். நடைபெறும் மணல் கொள்ளையால் பேரணை வைகை ஆற்றில் உள்ள குடிநீர் கிணறுகள் பெரும்பாலும் சரிந்து விட்டன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பல அடி கீழே சென்றுவிட்டது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடும் வரட்சியான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதை எதையும் பொருட்படுத்தாத ஆளும் கட்சியினர் மணல் வேட்டையை தொடர்கிறது. அணைப்பட்டி குருவித் துறை சாலையில் வைகைக் கரையோரம் உள்ள தென்னந் தோப்புகளில் மூன்று இடங்களில் பாதை அமைத்து ஆற்றுக்குள் இறங்கி மணல் திருடுவதற்காக அமைத்து உள்ளனர். இதில் உச்சகட்டமாக ஆற்றுக்கு நடுவே சென்று மணல் அள்ளுவதற்கு தரைப்பாலத்தை ஆற்றுக்குள் அமைத்தது மிகவும் கொடுமையானது என விவசாயிகள் கூறிவருகின்றனர்.
ஆனால் இந்த மணல் கடத்தல் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையோடு தான் இச்செயல்களில் மணல் கொள்ளையர்கள் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மணல் கொள்ளை நடைபெறும் நேரத்தில் வைகையாறு பாதுகாப்பு குழு உறுப்பினர் ஒருவர் வருவாய்த்துறை அதிகாரி ஒருவருக்கு செல்பேசி மூலம் நடவடிக்கை எடுக்க வருமாறு கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த தாசில்தார் "மணல் திருட்டை தடுப்பது தான் எனது வேலையா? வேறு ஆளை அனுப்பி வைக்கிறேன்" எனக் கூறி செல்போனை துண்டித்தார். அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.
இப்படி வைகை ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் வரும் காலங்களில் கடுமையான வறட்சி ஏற்படும் என விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
ஆகியோர் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகிறார்கள். அதற்கு அதிகாரிகள் செவிசாயிக்கவில்லை என்றால் கூடிய விரவில் மணல் கடத்தலை தடுக்க மாபெரும் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகிறார்கள்.