பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்தத் தேர்வை தள்ளிவைக்கக்கோரி ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர் யாரும் வரவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்த வழக்கில் ஜூன் ஒன்றாம் தேதி நடத்தப்படவுள்ள தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும். தேர்வு நடத்தினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உரிய போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தினால் ஜூன் ஒன்றாம் தேதி தேர்வு நடத்தப்படக் கூடாது என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுதினம் விசாரணைக்கு வரவுள்ளது.