தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் செப்டம்பர் 20- ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.
தென்மேற்கு அரபிக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.