3 நாள் பயணமாக திருச்சி – கரூர் – தஞ்சை ஆகிய பகுதிகளில் கட்சி மாணவர் அணி ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமண நிகழ்ச்சி, வரவேற்பு, மற்றும் நிச்சியதார்த்த நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடத்தி வைப்பதற்கு மு.க.ஸ்டாலின் திருச்சி வந்திருந்தார்.
திருச்சி அன்பிலார் குடும்ப வாரிசு வாளாடி கார்த்திகேயன் திருமண நிகழ்ச்சி இன்று காலை திருச்சியில் கலைஞர் அறிவாலையத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு கே.என்.நேரு, பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், துர்க்கா ஸ்டாலின் உள்ளிட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அனைவரையும் வரவேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த திருமணம் ஒரு காதல் திருமணம் திருமணம் என்பது மிகப்பெரிய சந்தோஷம். கல்யாணத்திற்கு முன்பே வந்தனாவின் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டவுடன் உடனே விமானம் பிடித்து அழைத்து சென்று முழு உடல் பரிசோதனை பார்த்து கொண்டு இனி நான் தான் பார்த்துக்கொள்வேன் என்று அந்த அளவு பாசத்தோட பார்த்துக்கொண்டார் என்று பேசினார்.
தொடர்ந்து வாழ்த்தி பேசிய டி.ஆர்.பாலு மணமகன் கார்த்தியும் நானும் உயரமானவர்கள். காரில் நானும் தளபதியும் வரும் போது… எங்களுடைய உயரத்தை வைத்து பேசினார். உண்மையில் உயரமாக இருப்பது நல்லது தான். ஆனால் தளபதி காரில் வேறு ஒரு அர்த்தத்தில் பேசினார் என்று காரில் உள்ளவர்களுக்கு தான் அது தெரியும் என்று பேசி சிரித்தார்.
கடைசியாக பேசிய மு.க.ஸ்டாலின், நான் உயராமாக இருப்பதை பத்தி பேசினதா டி.ஆர்.பாலு சொன்னார். அவர் எப்போதும் அறைகுறையாக புரிந்து கொண்டு அறைகுறையாக தான் பேசுவார். எதையும் முழுவதுமாக பேச மாட்டார். நான் என்ன பேசினேன் என்பதை அப்படியே சொல்கிறேன் ஆளும் வளருனும் அறிவும் வளரும்… சொன்னேன். கார்த்திக்கு நிறையவே இருக்கிறது என்று சொன்னேன் என்று டி.ஆர்.பாலுவை கிண்டல் பண்ணி பேச அந்த அரங்கமே கலகலப்பானது.
வாழையடி வாழையாக எங்கள் குடும்பமும், அன்பிலார் குடும்பமும் நெருக்கமாக இருந்து வருகிறது. இன்னும் இருக்கும். கலைஞரின் ஆணையை உடனடியாக செயல்படுத்துவதில் முதன்மையாக இருந்தவர் அன்பிலார். எந்த லட்சியத்திற்க்காக அன்பிலார் கலைஞருக்கு துணை நின்றாரோ அவர்களுடைய இலட்சியத்தை நிறைவேற்ற நாம் உறுதியேற்க வேண்டும். அன்பிலார் இல்ல திருமண நிகழ்ச்சியில் அரசியல் பேசாவிட்டால் எப்படி?
தி.மு.க ஆட்சிக்கு என்று வரும் என்பதை விட இந்த ஆட்சி என்று விலகும் என மக்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இரண்டு ஆட்சி நடைபெறுகிறது. எடப்பாடி தலைமையில் ஒரு ஆட்சியும், மத்திய அரசின் ஆணைக்கேற்ப செயல்படும் ஆளுநர் தலைமையில் ஒரு ஆட்சியும் நடந்து வருகிறது. இவ்விரு ஆட்சிகளும் மாநில உரிமைகளை பறித்து வருகிறது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அனைத்து கட்சிகளையும் அழைத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த மாட்டோம் என முடிவு செய்துள்ளார். ஆனால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.
இவர்கள் கவலையெல்லாம் ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதே. தமிழக முதல்வர் நீட், விவசாயிகள், காவிரி, எட்டு வழி சாலை, தூத்துக்குடி உள்ளிட்ட பிரச்சனைகளில் எதை பற்றியும் கவலைபடவில்லை, தன் ஆட்சியை காப்பாற்றி கோடி கோடியாய் கொள்ளை அடிப்பதில் தான் கவலை கொண்டுள்ளார் என்றார்.