வாழப்பாடி அருகே, தவறான உறவுக்கு அழைத்து வந்த காதலனை விரட்டிவிட்டு, இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் அமுதா (32, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் கணேசன் என்பவரும், அமுதாவும் நெருங்கிப் பழகி வந்தனர். கணேசனும் திருமணமானவர். அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து 'நெருக்கமாக' இருந்து வந்துள்ளனர். செப். 16ம் தேதியன்றும் அவர்கள் இருவரும் தனிமையில் 'சந்திப்பதற்காக' நெய்யமலை வனப்பகுதிக்குள் சென்றிருந்தனர்.
அங்கு இருவரும் தனிமையில் 'நெருக்கமாக' இருந்தபோது, வாழப்பாடியைச் சேர்ந்த 6 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்களை மிரட்டிய அந்த கும்பல், கணேசனை அங்கிருந்து விரட்டி அடித்தனர். அதன்பிறகு தனியாக சிக்கிக்கொண்ட அமுதா தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் அந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவருடைய கைப்பையில் இருந்த செல்போன், ஆதார் அட்டை ஆகியவற்றை பறித்துக்கொண்ட அவர்கள், கணேசனுடன் நெருக்கமாக இருந்ததை உன் கணவரிடம் கூறி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
அப்படிச் சொல்லாமல் இருக்க வேண்டுமானால், நாங்கள் சொல்லும்படி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினர். அதற்கு உடன்பட மறுத்த அமுதா, அவர்களிடம் இருந்து தப்பித்து சிறிது தூரம் ஓடினார். அதற்குள் அந்த கும்பல், அமுதாவை விரட்டிப்பிடித்து சரமாரியாக தாக்கியது. அவர்கள் அமுதாவை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கிடையே, தப்பியோடிய கணேசன் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு, நெய்யமலை வனப்பகுதிக்கு வந்தார். இதைப்பார்த்த அந்த கும்பல் அமுதாவை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது.
காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த அமுதாவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வாழப்பாடி டிஎஸ்பி சூர்யமூர்த்தியிடம் புகார் அளித்தனர். அவருடைய மேற்பார்வையில், வாழப்பாடி மகளிர் காவல் ஆய்வாளர் உமா பிரியதர்ஷினி மற்றும் காவலர்கள் இதுகுறித்து விசாரித்தனர்.
இந்த சம்பவத்தில், வாழப்பாடியைச் சேர்ந்த அழகேசன், சேதுபதி, வெங்கடாஜலம், கோகுல், மணிகண்டன், கலையரசன் ஆகிய ஆறு பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை செப். 17ம் தேதி கைது செய்தனர். அவர்கள் மீது பெண்ணை தாக்கி காயம் விளைவித்தல், மானபங்கப்படுத்தல், பாலியல் பலாத்காரம், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த கும்பலிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரும் வாழப்பாடியில் உள்ள நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் வாழப்பாடி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.