சேலம் அஸ்தம்பட்டி மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் உமாசங்கர். இவர் சேலம் 5 சாலை பகுதியில் உள்ள எஸ்ஆர்கே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாலை நேரங்களில் உமாசங்கரும் அவருடைய மனைவியும் வீட்டில் தனி வகுப்பும் நடத்தி வருகின்றனர்.
இவர்களிடம் சேலம் மரவனேரியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவரின் மகன் கவுதம் தனிப்பயிற்சி வகுப்பில் படித்து வந்தார். அதன்மூலம் உமாசங்கருக்கும் ஆறுமுகத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் உமாசங்கர் அவருடைய தங்கையின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தார். இதையறிந்த காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம், தனக்குத் தெரிந்தவர்கள் தங்க காசுகள் வைத்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்து குறைவான விலைக்கு தங்க காசுகளை வாங்கிக்கொள்ளலாம். நகைக்கடையில் வாங்கினால் தேவையில்லாமல் வரித்தொகையும் செலுத்த வேண்டியிருக்கும். திருமணத்திற்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய உமாசங்கர், தனக்கு தெரிந்தவர்களிடம் 5 லட்சம் ரூபாய் வாங்கி வைத்திருந்தார். இதையடுத்து ஆறுமுகம், கடந்த மே மாதம் இந்த பணத்தை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கொண்டு வந்து அங்கு வரும் ஒரு நபரிடம் கொடுத்துவிட்டு, தங்க காசுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று உமாசங்கரிடம் கூறியுள்ளார். அதன்படி உமாசங்கரும், அவருடைய தாயாரும் பள்ளிபாளையம் சென்று ஆறுமுகம் குறிப்பிட்ட இடத்தில் நின்றனர்.
அப்போது வாலிபர் ஒருவர் வந்து, காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் வைத்தார் என்று கூறினார். மேலும், அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட அந்த மர்ம நபர், அவர்களிடம் தங்க காசுகள் இருப்பதாக ஒரு பையைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அப்போது அந்த இடத்திற்கு வந்த சில வாலிபர்கள், யார் நீங்கள் இங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? கையில் வைத்திருக்கும் பணம் யாருடையது? நீங்கள் கையில் வைத்திருக்கும் பையில் என்ன இருக்கிறது? என்று விசாரித்தார்கள். இதற்கிடையே, ஆறுமுகம் அனுப்பியதாக வந்த மர்ம நபர், 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பியோடி விட்டார். பிறகுதான் உமாசங்கர், தன்னிடம் பணம் வாங்கிய மர்ம நபரும், மிரட்டிய நபர்களும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதையும், ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தார்.
இதுகுறித்து உமாசங்கர், காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகத்திடம் கூறினார். அதற்கு ஆறுமுகம், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. உங்களை யாரோ ஏமாற்றி உள்ளார்கள் என்றும், இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். பின்னர் உமாசங்கரும், அவருடைய தாயாரும் சேலம் வந்து, ஆறுமுகத்திடம் நடந்ததை மீண்டும் கூறினர். அப்போது ஆறுமுகம் அவர்களை மிரட்டியதோடு, கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து உமாசங்கர், வழக்கறிஞருடன் சென்று சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் திங்கள் கிழமை (ஜூன் 10) புகார் அளித்தார். தன் மகளுக்கு வரும் 19ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், ஆறுமுகத்திடம் இருந்து 5 லட்சம் ரூபாயை பெற்றுத்தருமாறும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல் துணை ஆணையர் தங்கதுரை நேரடியாக விசாரித்து வருகிறார்.