ஊரடங்கு அமலில் உள்ளதால் மனிதர்களே அத்தியாவசிய பொருள்களுக்கு தடுமாறி வரும் நிலையில், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் போதிய உணவு கிடைக்காமல் பட்டினியால் தவித்து வருகின்றன. இந்நிலையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம், தெரு நாய்களின் பசியை தணிக்கும் நோக்கில் அவற்றையும் அரவணைத்துக் கொள்ள முன்வந்திருக்கிறது.
சாலையோரம் சுற்றித்திரியும் நாய்களுக்கு தினமும் வாகனங்கள் மூலம் உணவு வழங்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் சதீஸ், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) துவக்கி வைத்தார். ஊரடங்கு அமலில் உள்ள வரை இத்திட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கரோனா பரவல் அபாயம் உள்ளதால் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நாள்களில் விளிம்பு நிலை மக்கள் பசியாற வசதியாக, இந்நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 11 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வீடற்றவர்கள், சாலையோரவாசிகள், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கும் நேரடியாகவும், ஸ்பான்சர்கள் மூலம் சமுதாய சமையல் கூடங்கள் அமைத்தும் உணவு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தெருவில் சுற்றும் வாயில்லா ஜீவன்களின் நலன்களையும் உள்ளடக்கி இருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தெரு நாய்களுக்கு மக்களும் உணவளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உணவளிக்க விரும்புவோர் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்டோர் 0427 2387514, அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்டோர் 0427 2314646, அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்டோர் 0427 2263161, கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்டோர் 0427 2461616 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.