காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு மேல்முறையீடு செய்ய, நீதிமன்றம் காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வரைவு திட்டத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக வரைவு திட்டம் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு நீதிமன்றத்தை கோரியது. மத்திய அரசின் இந்த தாமதத்தை கண்டித்த நீதிமன்றம் வரைவை சமர்ப்பிக்கவும் நான்கு டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்கவும் உத்தரவிட்டது.
அதன் பின் கடந்த 12-ஆம் தேதி கர்நாடக தேர்தல் முடிந்த நிலையில் இன்று சீலிட்ட கவரில் வரைவு திட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் தாக்கல் செய்துள்ளார். கர்நாடக தேர்தலுக்காக உச்சநீதிமன்றம் கொடுத்த அவகாசம் முடிந்த நிலையில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்த வரைவில் காவிரி குழு அல்லது வாரியம், ஆணையம் இதில் ஒன்றை அமைக்கபோவதாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அது பத்து பேர் கொண்ட அமைப்பாக இருக்கும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.
மேலும் இந்த வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணையானது 16-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.