
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் நபர் ஒருவர் ஆர்டர் செய்த பிரியாணியில் கூல் லிப் எனப்படும் போதை வஸ்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிரியாணி ஆர்டர் செய்த நபர் கூறுகையில், ''சோமாட்டோ ஆப் மூலம் திருநின்றவூர் காதர் பாய் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்திருந்தேன். மதியம் ஒன்றரை மணி அளவில் ஆர்டர் செய்த நிலையில், அரைமணி நேரத்தில் உடனே கொண்டு வந்து விட்டார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே பார்க்கிறேன் அதில் கூல் லிப் எனும் போதைப்பொருள் கிடந்தது. வாயில் போட்டு அப்படியே அதில் துப்பி உள்ளார்கள். மற்றவர்கள் எப்படி இதைச் சாப்பிடுவார்கள்? பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எத்தனை பேர் பிரியாணி சாப்பிடுகிறார்கள்.
கடையில் போய் கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது. எங்கள் மூலமாக நடக்கவில்லை நாங்க இதற்கு காரணம் இல்லை. மேலிடத்தில் நடந்திருக்கும் என சொல்கிறார்கள். அக்கடையின் மேனேஜர் கால் பண்ணாலும் ஒரு ரெஸ்பான்ஸ் கூட பண்ண மாட்டேங்குறார். எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம் என்கிறார். பேசிக்கொள்ளலாம் பார்த்துக்கொள்ளலாம் என்றால் நான் திடீரென வாமிட் எடுத்து கீழே விழுந்து விட்டாலோ அல்லது திடீரென மயங்கி இறந்து விட்டால் என் குடும்பத்தை யார் பார்ப்பார்கள். இதற்கு தமிழ்நாடு உணவுத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பார்த்து நடவடிக்கை எடுங்கள். இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள் பிரியாணியில் கிடைக்கிறது என்றால் அது எவ்வளவு உயிருக்கு ஆபத்து. இதை எல்லோரும் பார்த்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்வோடு இருங்கள்'' என தெரிவித்துள்ளார்.