நேற்று சென்னையில் நடைபெற்ற 'கமல் 60' நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "எங்களின் கொள்கைகள், சித்தாந்தங்கள் மாறலாம். ஆனால் எங்கள் இருவரின் நட்பு எப்போதும் தொடரும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வராவார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நான்கைந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? அதுபோல தமிழக அரசியலில் நாளை அதிசயங்கள் நடக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில்,
ரஜினிகாந்த் கூறியதில் தவறில்லை. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ரஜினி கூறியது ஒன்றும் தவறில்லை. நாளை எதுவும் நடக்கலாம். ரஜினி ஆன்மீகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மீக கோணத்தில் கூறியுள்ளார். பாட்ஷா படத்தின்போதே அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் காலம் தாழ்த்திவிட்டார். அதிமுக ஜெயிப்பதற்காக எந்தவித சித்து விளையாட்டுகளும் செய்யவோம் என பேசியது உண்மைதான் என்றார்.
மேலும், நாங்களும் அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருக்கும் நட்சத்திரங்களை தேர்தலில் களமிறக்குவோம். ரஜினி, கமல், விஜய் அரசியலுக்கு வரும்போது தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா? என்றார்.