சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த இரண்டு வாலிபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஆலங்காடு பகுதியில், ரயில் தண்டவாளத்தின் குறுக்கே பெரிய பாறாங்கல் ஒன்று வைக்கப்பட்டு இருப்பது குறித்து மே 18- ஆம் தேதி தெரிய வந்தது. ரயில் பாதை பரிசோதகர்கள் முறையாக ஆய்வு செய்யாததால் கல் கிடந்தது குறித்து எந்தத் தகவலும் ரயில்வே நிர்வாகத்திற்குச் சொல்லப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், அந்தப் பாதையில் ஒரு சரக்கு ரயில் வந்தது. தண்டவாளத்தின் குறுக்கே கிடந்த கல் மீது மோதியதை அறிந்த இன்ஜின் ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர் இடையூறாக இருந்த கல்லை அகற்றிவிட்டு, மீண்டும் ரயிலை இயக்கினார். இச்சம்பவம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடமான ஆலங்காடு பகுதி, ஈரோடு மாவட்டத்திற்குள் வருவதால், அம்மாவட்ட ரயில்வே காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, டிஎஸ்பி அண்ணாதுரை, ஆய்வாளர் சிவசெந்தில்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். விசாரணையில், சேலம் மாவட்டம் பாரப்பட்டியைச் சேர்ந்த நாகலிங்கம், பாபு ஆகிய இரு வாலிபர்கள்தான் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே கல்லை வைத்தது தெரிய வந்தது.
கடந்த 18- ஆம் தேதி, அவர்கள் இருவரும் ஆலங்காடு பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அப்போது ரயில் பாதையில் அமர்ந்து மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், பெரிய கல்லைத் தூக்கி ரயில் பாதையில் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.