கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து, சேலம் மாவட்டம் கரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தோனேஷியாவில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வந்த முஸ்லிம் மதகுருமார்கள் 4 பேர் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த ஒருவர் என முதன்முதலில் ஐந்து பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன்பிறகு, மதகுருமார்கள் சென்ற பள்ளிவாசல்கள், சுற்றுவட்டாரத்தில் வசித்தவர்கள், டெல்லி தப்லீக் மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் என மொத்தம் 35 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தல் வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பூரண குணமடைந்த நபர்கள் படிப்படியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்த சேலத்தைச் சேர்ந்த 2 பேரும், தர்மபுரியைச் சேர்ந்த ஒருவரும் என மூன்று பேரும் முழுமையாக கரோனாவில் இருந்து குணமடைந்ததை அடுத்து, அவர்களும் வெள்ளிக்கிழமை (மே 15) வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, சேலம் மாவட்டத்தை இன்று (15/05/2020) முதல் கரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக ஆட்சியர் ராமன் அறிவித்துள்ளார்.
நோய்த்தொற்றில் இருந்து குணம் பெற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களை ஆட்சியர் ராமன், எம்.எல்.ஏ. சக்திவேல், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், எஸ்.பி. தீபா கனிகர், சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால், சுகாதாரப்பணி இணை இயக்குநர் மலர்விழி வள்ளல், துணை இயக்குநர் நிர்மல்சன், சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கரவொலி எழுப்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களுக்கு மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருள்களையும் வழங்கினர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியது: சேலம் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாவதற்கு ஒருங்கிணைந்து பணியாற்றிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அனைவரும், அடுத்த 14 நாள்களுக்கு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். இவர்கள் பின்பற்ற வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் குறித்து மருத்துவர்கள் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு, பகல் பாராமல் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து குணப்படுத்தி உள்ளனர். அவர்களுக்குப் பாராட்டுகள்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சேலம் மாவட்ட சித்த மருத்துவப் பிரிவின் சார்பில், கரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் வகையில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி, முகக்கவசம், சத்து மாத்திரைகள், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்பும் இலவசமாக வழங்கப்பட்டது.
கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நோய்த்தடுப்பு பாதுகாப்பு, விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சேலம் மாவட்டம் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக தொடர்ந்து நீடிக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறினார்.