சேலத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த்தொற்று அபாயத்தில் இருந்து தப்பிக்க ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பொதுவெளியில் நடமாடுவதாக இருந்தால், ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 அடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் இதுவரை 30 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பெண்ணுக்கு நோய்த்தொற்று இருப்பது நேற்று (ஏப். 26) உறுதியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் உறவினர்களுடன் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்குச் சென்று திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் சேலம் அம்மாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
அவருக்குச் சளி, காய்ச்சல் இருந்ததால் மருத்துவர்கள் உடல் பரிசோதனை செய்தனர். இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டார். மேலும், அவருடன் கோயிலுக்குச் சென்று திரும்பிய உறவினர் உள்பட 26 பேருக்கும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்களும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அம்மாபேட்டையில் உறவினர் வீடு உள்ள பகுதியில் சாலை நடுவே தடுப்புக்கட்டைகள் அமைத்து மூடி சீல் வைக்கப்பட்டது. நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணையும் சேர்த்து, சேலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், தொற்று பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.