சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மகன் அஜித்குமார் (17). கடந்த 15- ஆம் தேதி தனது நண்பர்கள் மூன்று பேருடன் அப்பகுதியில் உள்ள கரட்டுக்குச் சென்றிருந்தான். சிறிது நேரத்தில் வீட்டிற்கு போதையேறிய நிலையில் தள்ளாடியபடி வந்துள்ளான். தனக்கு மயக்கம் வருவதுபோல் இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளான் அஜித்குமார். இதையடுத்து பெற்றோர் 108 ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனம் வீட்டுக்கு வந்து சேர்ந்த நிலையில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், சிறுவன் அஜித்குமார், தனது நண்பர்களுடன் போதைக்காக வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டப் பயன்படுத்தப்படும் சொலூசன், பெயிண்டில் கலப்பதற்காக பயன்படுத்தக் கூடிய தின்னர் திரவம், தூக்க மாத்திரை ஆகியவற்றை நீரில் கலக்கிக் குடித்துள்ளதோடு, போதை ஊசியும் உடம்பில் செலுத்தி இருப்பது தெரிய வந்தது.
சம்பவத்தன்று அஜித்குமாருடன் சுற்றித்திரிந்த மூன்று நண்பர்களையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அவர்களுக்கு போதை மாத்திரை, சிரிஞ்சுகள், போதை மருந்து ஆகியவை வழங்கியது யார்? எப்படிப் பெற்றார்கள்? என்ன வகையான போதை மருந்து பயன்படுத்தப்பட்டது? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். சிறுவர்கள் கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி கேட் பகுதிகளில் உள்ள இரண்டு மருந்து கடைகளில் தூக்க மாத்திரை, போதை மருந்துகளை வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மருந்துக் கடை ஊழியர்கள் சிறுவர்களிடம், இருதய நோயாளிகள் வலி தெரியாமல் இருப்பதற்காக விழுங்கக்கூடிய, 160 ரூபாய் மதிப்புடைய மாத்திரைகளை 1,600 ரூபாய்க்கு விற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் குருபாரதி மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ரேகா, மாரிமுத்து ஆகியோர் திங்களன்று (மே 18) சம்பந்தப்பட்ட மருந்துக் கடைகளில் நேரில் விசாரணை நடத்தினர். அவர்கள் சிறுவர்களிடம் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலேயே போதை மாத்திரை, ஊசி மற்றும் மருந்துகளை விற்றிருப்பது உறுதியானது. மேலும் அவ்விரு கடைகளில் இருந்தும் விற்கப்படாமல் உள்ள சில மருந்து, மாத்திரைகளை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். அந்த இரு மருந்துக் கடைகள் மீது மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, அன்னதானப்பட்டி காவல்துறையினர், மருந்துக் கடைகளின் உரிமையாளர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இறந்த சிறுவனின் உடற்கூறாய்வு அறிக்கை வந்ததும், மருந்துக் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காவல்துறை.