
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில், சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களுக்கும் தேர்தல் நடந்தது. அப்போது திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, மேயர் பதவியைக் கைப்பற்றியது.

அ.தி.மு.க. தரப்பில் 7 பேர் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர். மேயர் பதவியேற்புக்குப் பிறகு இரண்டு கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த பதவியைக் கைப்பற்ற அக்கட்சியில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவராக 36- வது கோட்ட கவுன்சிலர் யாதவமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். 22- வது வார்டு கவுன்சிலர் கே.சி.செல்வராஜ் கொறடாவாகவும், 25- வது வார்டு கவுன்சிலர் சசிகலா எதிர்க்கட்சி செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எதிர்க்கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு பட்டியலை, அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியுள்ளார்.