சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை – மகனை காவல்துறை அதிகாரிகள் அடித்து கொலை செய்த வழக்கில் போலீஸ் நண்பர்கள் குழுவை (ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்) சேர்ந்தவர்கள் பெயர்கள் அடிப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களை போலீஸ் நண்பர்கள் குழுவில் வைத்துள்ளனர் என சர்ச்சை எழுந்தது.
அதோடு போலீஸ் நண்பர்கள் குழு என்கிற பெயரில் இயங்கிக்கொண்டு பொதுமக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் தமிழகம் முழுவதும் போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டது. இனி காவல்துறை, அவர்களை எதற்காகவும் அழைக்கக்கூடாது எனச்சொல்லப்பட்டது.
இந்நிலையில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்கிற அமைப்பு ப்ரண்ட்ஸ் ஆஃப் பீப்புள் என்கிற பெயர் மாற்றத்தோடு மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. இதனை ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் என்கிற அமைப்பை உருவாக்கிய டி.ஐ.ஐீ டாக்டர் பிரதீப் வி பிலிப் ஐ.பி.எஸ்.தான் இந்த அமைப்பின் நிறுவன தலைவராக இருந்து தொடங்கியுள்ளார்.
பிரண்ட்ஸ் ஆஃப் பப்ளிக் (பொது மக்களின் நண்பர்கள்) என்ற சமூக தொண்டு அமைப்பு தனது பணிகளாக கீழ்கண்டவற்றை அறிவித்துள்ளது. அவை, காவல்துறை மற்றும் அனைத்து அரசு துறைகளிலும் இணைந்து செயல்படுவோம். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வோம். ஆபத்தில் உள்ள மக்களை காப்பாற்றி நல்வழி படுத்துவோம். என்றென்றும் பொதுமக்களுக்கு துணை நிற்போம் தொண்டு செய்வோம் எனக்கூறுகிறது.