Skip to main content

மதுரையில் ரதயாத்திரை நடத்த அனுமதி!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

radha yatra madurai high court bench order police

 

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அனைவரிடமிருந்தும் பொருள் உதவி பெறும் நோக்கில் ரத யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் மதுரையில் உள்ள 100 வார்டுகளில் அந்த வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதிக்கக் கோரி உதவி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தோம்.

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதனைக் கருத்தில் கொண்டும், சட்ட ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டும் அனுமதி வழங்க இயலாது என மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இன்று (19/02/2021) இரவு 08.00 மணி முதல் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு ரத யாத்திரை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, மதுரையில் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். 

 

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு அவசர வழக்காக இன்று (19/02/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆணையர் தரப்பில், உதவி காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப்பெற்று நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி இன்று (19/02/2021) மாலைக்குள் மதுரையில் ரத யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்