Skip to main content

சேலம்-சென்னை விமான சேவையில் மாற்றம்...

Published on 08/08/2020 | Edited on 08/08/2020
salem

 

 

சேலத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ட்ரூஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரே ஒரு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கரோனா ஊரடங்கு காலத்தில், விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.

 

இதையடுத்து கடந்த மே 27ம் தேதி முதல் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. கடந்த ஜூலை இரண்டாவது வாரத்தில், நிர்வாக காரணங்களால் விமான சேவை திடீரென்று நிறுத்தப்பட்டது. பின்னர் ஜூலை 20ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட்டது. எனினும், விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது.

 

புதிய கால அட்டவணைப்படி, சென்னையில் இருந்து காலை 11.45 மணிக்கு புறப்படும் விமானம், 12.45 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடையும். மீண்டும் 1.05 மணிக்கு சேலத்தில் இருந்து கிளம்பி, 2.05 மணிக்கு சென்னைக்கு சென்றடையும். இது ஒருபுறம் இருக்க, பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதாகவும், போதிய அளவில் வர்த்தகம் இல்லை என்று கூறியும் விமான சேவையை வாரத்திற்கு இரண்டு நாளாக குறைத்தது ட்ரூஜெட் நிறுவனம்.

 

இந்நிலையில், வரும் திங்கள் கிழமை (ஆக. 10) முதல் வாரத்திற்கு மூன்று நாள்களுக்கு விமான சேவை இயக்கப்படும் என காமலாபுரம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய அட்டவணைப்படி வாரத்தில் இனி திங்கள், புதன், சனிக்கிழமைகளில் சேலம் - சென்னை விமான சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்