சேலம் டூ சென்னை வரையிலான எட்டுவழிச்சாலை திட்டத்தினை எப்படியாவது கொண்டு வந்து விட வேண்டும் என அதிமுகவின் எடப்பாடி அரசாங்கம் பெரும் சதித்திட்டம் தீட்டி செயல்படுவதாக பாதிக்கப்படும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் விவசாய மக்களும், விவசாய அமைப்புகளும் பேசியும், போராடியும் வருகின்றன.
இந்நிலையில் மே 29ந்தேதி ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சராகவுள்ள மாஃபா பாண்டியராஜன், 8 வழிச்சாலை பாதையால் 7 சதவித விவசாயிகள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள் என பேசியுள்ளார். இது விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தவறான தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பேசி வருகிறார்கள் முதலமைச்சரும், அமைச்சர்களும், அதிமுகவினரும் என்கின்றனர் விவசாயிகள்.
அமைச்சரின் இந்த பேச்சை கண்டித்து, மே 30ந்தேதி காலை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரும்பட்டம் கிராமத்தில் அமைச்சர் பாண்டியராஜனின், ஆணவ பேச்சிற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் மே 30ந்தேதி மாலை 5:30 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தொரப்பாடி கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் 8 வழிச்சாலைக்காக விவசாயிகளிடமும், மக்களிடமும் வெறும் 7% மட்டும் எதிர்ப்பு இல்லை, 97% எதிர்ப்பு உள்ளது என்பது இனி ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும் போராட்டம் ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தும் என்றார்கள்.