சேலத்தில் அண்ணா பூங்காவை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமையன்று (ஜனவரி 16, 2019) திறந்து வைத்தார்.
சேலம் மாநகர மக்களுக்கு நகர எல்லைக்குள் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இடமாக அண்ணா பூங்கா திகழ்கிறது. அரை ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பளவு உள்ள இந்த பூங்காவின் உள்புறம் ஏற்கனவே தின்பண்ட கடைகள், சிற்றுண்டி கடைகள் ஆக்கிரமித்து உள்ளன.
இந்நிலையில், அண்ணா பூங்காவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு முழு உருவ வெண்கலச்சிலைகள் அமைக்கப்படும் என்றும், புதிதாக மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கான பூமிபூஜை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி நடந்தது. இதற்காக 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில், மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமையன்று (ஜனவரி 16) காலை திறந்து வைத்தார்.
வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சமூகநலத்துறை அமைச்சர் மருத்துவர் சரோஜா, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, பன்னீர்செல்வம் எம்பி, எம்எல்ஏக்கள் வெங்கடாஜலம், சக்திவேல், வெற்றிவேல், சித்ரா, மாநகராட்சி ஆணையர் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநகர எல்லைக்குள், அண்ணா பூங்காவை ஆக்கிரமித்து இந்த மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளதால் முக்கிய ஓமலூர் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மகுடஞ்சாவடியில் பல்வேறு துறைகளில் சார்பில் 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.