![m](http://image.nakkheeran.in/cdn/farfuture/nrErpn6aqEFE2BtfmhBK1jfWxwt6HHzJ0iRqPXp19XE/1544126374/sites/default/files/inline-images/menaga-kalaimagal-revathi_0.jpg)
சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் மூன்று பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு ஐந்து மகள்கள். இவர்களுடைய தாய் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், தந்தையின் பாதுகாப்பில்தான் இருந்து வந்தனர். அழகேசனின் முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது.
மற்ற மூன்று மகள்களான மேனகா (33), ரேவதி (28), கலைமகள் (26) ஆகியோர் வேலைக்குச் சென்று வந்தனர். இந்நிலையில் அவர்கள் மூன்று பேரும் கடந்த 28.8.2018ம் தேதி திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சீலநாய்க்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்த நிலையில், கடந்த 28.9.2018ம் தேதி மேனகா சிகிச்சை பலனின்றி இறந்தார். கலைமகள் அபாய கட்டத்தில் இருந்தார். ரேவதி மட்டும் உயிர் தப்பினார்.
மேனகாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால், தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ஆனால், சேலத்தில் வின்ஸ்டார் இண்டியா சிட்டி டெவலப்பர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த சிவக்குமார்தான் தங்களை தற்கொலைக்கு தூண்டியதாக உயிர் பிழைத்த சகோதரிகளுள் ஒருவரான ரேவதி புகார் கூறினார். இது தொடர்பாக அவர் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஆகியோரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருந்ததாவது:
![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/0egp5MjGFyeeEbfVmFPNh9MRTDCyoGd05frm9UiXANo/1544126424/sites/default/files/inline-images/sivakumar%20copy.jpg)
''வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் தொகையை, பதினெட்டு மாதங்களில் இரட்டிப்பு செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை நம்பி சகோதரிகளிடமும், உறவினர்களிடமும் 15 லட்சம் ரூபாய் பெற்று, வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தேன்.
இந்த நிலையில்தான் மேனகாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்காளின் திருமணத்திற்காக முதலீடு செய்திருந்த தொகையை திருப்பிக் கேட்டபோது வின்ஸ்டார் அதிபர் சிவக்குமார் பணத்தை தர மறுத்ததோடு, நீங்கள் செத்துப்போனால் எனக்கென்ன? உயிரோடு இருந்தால் எனக்கென்ன? என்று அலட்சியமாக பேசினார்.
அதனால் ஏற்பட்ட விரக்தியில்தான் நாங்கள் மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். சிகிச்சை பலனின்றி மேனகா இறந்து விட்டார். மற்றொரு சகோதரி கலைமகள் கவலைக்கிடமாக இருக்கிறார்,'' என்று புகார் மனுவில் ரேவதி கூறியிருந்தார்.
ஆனால் இந்த மனு மீது அப்போது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்கொலைக்கு தூண்டியதாக வழ க்குப்பதிவு செய்யக்கோரி ரேவதி தரப்பு, மீண்டும் காவல்துறை ஆணையரை அணுகினர்.
இதற்கிடையே, கவலைக்கிடமான நிலையில் இருந்த கலைமகளும் சிகிச்சை பலனின்றி 15.10.2018ம் தேதி உயிரிழந்தார். அதன்பிறகே, அம்மாபேட்டை போலீசார், வின்ஸ்டார் நிறுவன அதிபர் சிவக்குமார் மீது, இளம்பெண்களை தற்கொலைக்கு தூண்டியதாக இ.த.ச. பிரிவு 306ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வாறு வழக்குப்பதிவு செய்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் சிவக்குமாரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, ''வின்ஸ்டார் சிவக்குமார் சென்னையில் உள்ள ஒரு வழக்கறிஞரின் பாதுகாப்பில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்பேரில் தனிப்படை போலீசாரும் இதுவரை மூன்று முறை சென்னயையில் தேடி விட்டோம். ஆனாலும் சிவக்குமார் இருக்கும் இடம் தெரியவில்லை. தொடர்ந்து அவரை தீவிரமாக தேடி வருகிறோம்,'' என்றனர்.
தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வைக்கவோ பலமுறை அலைக்கழித்த காவல்துறையினர், வின்ஸ்டார் சிவக்குமாரை கைது செய்யாமல் அவரை தப்பிக்க வைக்கவே திட்டமிட்டே காலம் கடத்தி வருவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.