அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மூத்த நிர்வாகிகளுடன், ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டிருப்பதாகத் தகவல் கூறுகின்றன.
இந்தநிலையில், அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொண்டர்கள் முழக்கமிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதலில் கட்சி நிர்வாகி ஒருவர் காயமடைந்தார்.
ரத்த காயத்துடன் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளரும், பெரம்பூர் பகுதிச் செயலாளருமான மாரிமுத்து, எடப்பாடி ஆளா? என்று கேட்டுத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன், ''செயற்குழு,பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக் கூடிய தீர்மானம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசிக்கப்பட்ட தீர்மானம் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. இந்த தீர்மானங்கள் முழுமையாக இறுதி வடிவம் பெற்றபிறகு முறையாக பத்திரிகையாளர் சந்திப்பு தலைமை கழகத்தின் சார்பில் நடத்தப்படும். ஒற்றைத்தலைமை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. திமுகவின் மக்கள் விரோத போக்கு, மக்களின் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சில சில வருத்தங்கள்... சில சில சச்சரவுகள் எழுந்திருக்கிறது. இவையெல்லாம் வருந்தத்தக்க ஒன்று. அதிமுக ஒற்றுமையோடும், ஒருமைப்பாட்டு உணர்வோடும் எம்ஜிஆர் எதற்காக இந்த இயக்கத்தை தொடங்கினாரோ, ஜெயலலிதா எப்படி இந்த இயக்கத்தைக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்தாரோ அதே வீரியத்தோடு எழுந்து, வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் யூகங்களைத்தான் வகுக்க வேண்டும். மற்றபடி கருத்துமாதல்கள், சண்டை சச்சரவுகள் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து'' என்றார்.