திருவண்ணாமலை நகருக்கு தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். திருவண்ணாமலையில் இருந்து சென்னை, பாண்டிச்சேரி, பெங்களுரூ, வேலூர் மற்றும் தென்மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள். திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எப்போதும் பேருந்துகளாளும், பொதுமக்களாளும் நிரம்பி வழியும்.
திருவண்ணாமலை நகரத்துக்கு வருவதற்கு 9 சாலைகள் உள்ளன. இதில் பெங்களுரூ சாலை, வேலூர் சாலை, சென்னை சாலை போன்றவற்றில் 15 நிமிடத்துக்கு ஒரு அரசு பேருந்து, இடைப்பட்ட நேரத்தில் தனியார் பேருந்துகள் பயணமாகிக்கொண்டே இருக்கும். திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் சாலையில் நகரத்துக்குள்ளேயே ரயில்வே கிராஸிங் உள்ளது. அதேபோல் அவலூர்பேட்டை சாலையிலும் ரயில்வே கிராஸிங் உள்ளது. ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படுவதால் இந்த இரண்டு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி அது கிளியராக 30 நிமிடங்களாவது ஆகும். திருவண்ணாமலை டூ சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் பல ஆண்டுக்கால கோரிக்கை.
2015ஆம் ஆண்டு சட்டமன்றத்தில், திருவண்ணாமலை டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அறிவித்து சில ஆண்டுகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது, 39 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் ஒப்பந்தம் போடப்பட்டது. 2019 பிப்ரவரி மாதம் மேம்பாலப் பணி தொடங்கியது. அப்போது திருவண்ணாமலை டூ சென்னை, திருவண்ணாமலை டூ விழுப்புரம், திருவண்ணாமலை டூ திருக்கோவிலூர், பெங்களுரூ டூ பாண்டிச்சேரி செல்லும் வாகனங்களின் பாதை மாற்றப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்தும், பிறசாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் அவலூர்பேட்டை சாலை வழியாகவும் பைபாஸ் சாலைக்கு சென்று மேற்கண்ட ஊர்களுக்கு செல்லும் சாலைகளில் இணைவது போல் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
மேம்பாலப்பணி நடந்துவந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்கள் சுமார் 5 கி.மீ முதல் 7 கி.மீ வரை சுற்றிக்கொண்டு நகரத்துக்கு வந்து செல்ல துவங்கினர். இதனால் அவலூர்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நகருக்குள்ளும் போக்குவரத்து நெரிசல் அதிகமானது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், இந்த மேம்பால பணியை வேகமாக முடிக்க வேண்டுமென பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மூன்று முறை கள ஆய்வு செய்து வேலையை தூரிதப்படுத்தினார். கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் சென்னை சாலையில் உள்ள மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதேபோல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் வேலூர் சாலையிலும் ஒரு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இரண்டு மேம்பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதங்களை கடந்துவிட்டு திறப்புவிழாவுக்கு தயாராகவுள்ளது. ஆனால், அதனை திறக்காமலே வைத்துள்ளனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் நாம் விசாரித்தபோது, இன்னும் சில வேலைகள் இருக்கிறது அதனால் திறக்கவில்லை எனப் பதிலளிக்கிறார்கள்.
விவரம் அறிந்தவர்களோ, திருவண்ணாமலை நகராட்சிக்கான புதிய பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக உத்தரவு கிடைத்துவிட்டது, அதற்கான இடம் தேர்வும் நடந்துவிட்டது. அந்த இடத்துக்கு இன்னும் துறை ரீதியிலான உத்தரவும், நிதியும் ஒதுக்கப்படவில்லை. அது கிடைத்ததும் அதற்கான அடிக்கல்நாட்டு விழா, தனியார் நிறுவனத்தின் சார்பில் வேலூர் சாலையில் கட்டப்படும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு வளைவு திறப்பு விழா போன்றவற்றை ஒருங்கிணைத்து, இந்த மேம்பாலங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டுமென திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ.வ.வேலு விரும்புகிறார். புதிய பேருந்து நிலையத்திற்கான நிதி மற்றும் அண்ணா நூற்றாண்டு வளைவு ஆகியவை ஓ.கே. ஆகும்போது மேம்பாலங்கள் திறப்பும் நடக்கும். அதேபோல், முதலமைச்சரின் தொடர் அலுவல் பணிகளில் தேதி இல்லாததும் மேம்பாலங்கள் திறப்பில் தாமதம் ஏற்படுகிறது என்கிறார்கள்.
திறக்கப்படாத இந்த மேம்பாலங்கள் இரவு நேரங்களில் குடிமகன்கள் குடிக்க ஏதுவான இடமாக உள்ளது. குடிக்கும் குடிமகன்கள் சிலர் அந்த பாட்டில்களை மேம்பாலத்து மேலேயே போட்டுவிட்டும் சென்றுள்ளனர். இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் 7 கி.மீ சுற்றி வருகின்றனர். அதோடு தினமும் பள்ளி, கல்லூரி நேரத்தில் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.