அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்கச் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று (11/07/2022) காலை 06.30 மணிக்கு புறப்பட்டார் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. வழிநெடுகிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
கடந்த முறை பொதுக்குழுவுக்கு காரில் சென்ற எடப்பாடி பழனிசாமி, இந்த முறை பிரச்சார வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த முறை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பியதால், சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டு வழியே செல்லாமல் மந்தைவெளி சாலையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு நடக்கவுள்ள வானரகத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு நடக்கவுள்ளதையொட்டி, ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வினர் குவிந்துள்ளனர்.
போலி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை தடுக்க, திருமண மண்டபத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்குத் தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று (11/07/2022) 09.00 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.
இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அ.தி.மு.க.வின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்யவுள்ளதாகவும் தகவல் கூறுகின்றனர்.
இதனிடையே, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்கள், நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.