பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. பெட்ரோல், டீசலின் தொடர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவந்தனர். மேலும், விலையைக் குறைக்கக் கோரி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 11 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “4.11.21 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரியை முறையே ரூ.5 மற்றும் ரூ.10 எனக் குறைத்த பிரதமர் மோடிக்கு என் மனமார்ந்த நன்றி. சமூகத்தின் அனைத்து பிரிவினரின் வாங்கும் சக்தியையும் இந்த முடிவு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.