சபரிமலைக்குச் சென்றிருந்த சேலத்தைச் சேர்ந்த பக்தரை நடுக்காட்டில் யானை மிதித்து கொன்றது.
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் இருந்து கடந்த 7ம் தேதியன்று 40 அய்யப்ப பக்தர்கள், சபரிமலைக்கு இரண்டு வேன்களில் சென்றனர். செவ்வாய்க்கிழமை (ஜன. 8) மாலை அவர்கள் பம்பைக்குச் சென்று, அங்கிருந்து ஏழு மைல் பாதை வழியாக 30 பேர் மட்டும் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
பத்து பேர் கொண்ட குழுவினர், எரிமேலி வனப்பகுதி வழியாக கால்நடையாக சபரிமலைக்குச் சென்றனர். இவர்களுடன் சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி பரமசிம் (26), தனது உறவினர்களின் இரண்டு குழந்தைகளுடன் வனப்பகுதி வழியாக நடந்து சென்றார்.
நள்ளிரவில் நடுக்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மூன்று யானைகள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த கும்பலை பார்த்ததும் யானைகள் துரத்தின. பக்தர்கள் பத்து பேரும் யானைகளிடம் இருந்து தப்பி ஓடினர். ஆனால் யானைகள் அவர்களை விடாமல் துரத்திச்சென்றன.
குழந்தைகளுடன் தப்பி ஓடிய பரமசிவத்தை ஒரு யானை நெருங்கியது. நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், இரண்டு குழந்தைகளையும் அருகில் இருந்த புதருக்குள் வீசியெறிந்தார். தப்பிக்க வழி தெரியாமல் கீழே விழுந்து கிடந்த பரமசிவத்தை யானை காலால் மிதித்து கொன்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த சபரிமலை வனத்துறையினர் மற்றும் பெருமந்துரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பரமசிவத்தின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து புதருக்குள் வீசப்பட்ட குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.