நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக்கழகம் அமைப்பது தொடர்பாக உரம் மற்றும் இரசாயனத்துறைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் ஆகியோரை இன்று (23.10.2021) சந்தித்தார். இச்சந்திப்பின்போது, தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக்கழகத்தை (NIPER) மதுரையில் அமைப்பது தொடர்பான கடிதங்களை வழங்கி, திட்டத்தை துவக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், விரைந்து துவக்க வேண்டிய தேவை குறித்தும் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தாவது, “தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்காக மதுரையில் 2012ஆம் ஆண்டு தரப்பட்ட நூறு ஏக்கர் நிலமானது, முன்நுழைவு அனுமதிக்கான சான்று மட்டுமே தரப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்நிலமானது கழகத்தின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படாமலே இருக்கிறது. அதற்கான விண்ணப்பமும் மருந்தியல் கழகம் சார்பில் தரப்படவில்லை.
இது தேவையற்ற பிரச்சனையைப் பிற்காலத்தில் உருவாக்கும். குறிப்பாக மதுரை எய்ம்ஸ் போல, நிலத்துக்கான பெயர் மாற்றம் மற்றும் ஒப்படைத்தல் என்பதே பெரும் கால விரயத்தை உருவாக்கும் நிலையும் ஏற்படலாம். சில நேரம் பிற வேலைகளுக்காக நிலம் பயன்படுத்தப்பட்டுவிடும் ஆபத்தும் உண்டு.
எனவே நிலத்தை தேசிய மருந்தியல் கல்விக் கழகத்தின் பெயரில் மாற்றித்தர உரிய விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு துறைச் செயலாளரிடம் வலியுறுத்தினேன். மதுரை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியிடமிருந்து பெற்றுவந்த அதற்குறிய விண்ணப்பத்தையும் ஒன்றிய அரசின் செயலாளர் வசம் ஒப்படைத்தேன். விரைவில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.