புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலீஸ், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவையும் மாற்ற வேண்டும். இந்தக் குழுவும் எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கை வயல் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
நீதிமன்ற அனுமதிக்குப் பிறகு வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 11 பேரின் மாதிரிகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருந்த 11 பேரில் எட்டு பேர் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்யப்பட்டது.
எஞ்சியுள்ள மூவரும் தங்களது ரத்த மாதிரிகளை கொடுத்தனர். அவர்களது மாதிரிகள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தின் மூலம் சென்னையில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த 2 நபர்கள், இறையூர் கிராமத்தைச் சேர்ந்த 7 நபர்கள், மேலமுத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் என 10 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ரத்த மாதிரிகளை எடுத்தனர். இம்மாதிரிகள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நடுவர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்குப் பின் அந்த ரத்த மாதிரியும் சென்னையில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். 119 பேருக்கு ரத்த மாதிரிகளை எடுக்க நீதிமன்றம் திட்டமிட்டிருக்கும் நிலையில் ஏற்கனவே 8 பேர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து 10 கட்டங்களாக 119 பேருக்கும் ரத்த மாதிரிகளை எடுக்க சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக குடிநீரில் மலத்தை கலந்தவர்கள் மூவர் என்று அவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் 119 பேருக்கும் ரத்த மாதிரிகளை சேகரித்து மலத்தை கலந்த மூவரின் மாதிரிகள் 119 பேரிடம் ஒப்பீடு செய்யப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.