
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வந்தது. இந்த நிலையில், சென்ற சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், பவானி, பெருந்துறை, ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலைநேரம் கடுமையான பனிப்பொழிவு நிலவியது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று (31.12.2020) பல்வேறு இடங்களில் காலை முதல் தொடர்மழை பெய்தது. இதனால் வேலைக்குச் செல்லும் மக்கள், மற்றும் வியாபாரிகள் பாதிப்புக்குள்ளானார்கள். ஈரோடு நகர்ப் பகுதியில் காலை 8 மணி முதல் சாரல் மழை நீண்டநேரம் பெய்தது.
இதேபோல், பவானி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று காலை முதல் சாரல்மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். மலைப்பகுதியான தாளவாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலும் காலைமுதல் மேகமூட்டம் இருள்சூழ்ந்து காணப்பட்டது. பின்னர், சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தாளவாடி, சூசைபுரம், மெட்டல் வாடி, ஓசூர் சிக்கள்ளி, திகனாரை, திம்பம் ஆசனூர், பர்கூர் மற்றும் வனப்பகுதிகளில் சாரல் மழையால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்துசென்றன. இதைப்போல் அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சாரல்மழை பெய்தது.