திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது 18 வயது மகன் சஞ்சீவி. இவர் அவரது உறவினரான சௌந்தர்ராஜன் உடன் அதே கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவர் விவசாய நிலத்தில் ஏர் உழுது கொண்டு இருந்துள்ளனர். உணவு அருந்துவதற்காக டிராக்டர் ஓட்டுனர் செளந்தர் வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது சஞ்சீவி தான் தற்போது டிராக்டரை இயக்குவதாக செல்ஃபோனில் செல்ஃபி எடுத்து தனது ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். பின்னர் டிராக்டரை இயக்கியுள்ளார். அப்போது ஓட்டத்தெரியாமல் ஓட்டியதில் அங்கிருந்த விவசாய நிலத்தில் இருந்த சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் டிராக்டருடன் தலைகுப்புற கவிழ்ந்து நீரில் மூழ்கி உள்ளார்.
இதனைப்பார்த்த அக்கம்பக்க விவசாய நிலத்தில் வேலை செய்தவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயன்றனர் ஆனால் முடியவில்லை. பின்னர் போலீசார் மற்றும் தீயிணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வாணியம்பாடி தீயணைப்பு துறையினரும் மற்றும் அம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்க போராடினர்.
சடலத்தை மீட்க முடியாததால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து 4 மின் மோட்டார்களை கொண்டு வந்து கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியே இறைத்து கிணற்றில் இருந்து நீர்மட்டத்தை குறைத்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் சுமார் 4 மணி நேரத்திற்கு பின்னர் டிராக்டர் மற்றும் சடலத்தை மீட்டனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.