Skip to main content

மாநகராட்சியில் ரூ.4.66 கோடி கையாடல்; பெண் அலுவலர் உட்பட இருவர் கைது

Published on 08/08/2024 | Edited on 08/08/2024
nn

திண்டுக்கல்  மாநகராட்சியில் ரூ.4.66 கோடி கையாடல் செய்த பெண் அலுவலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்  மாநகராட்சியில் கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளராக நெட்டு தெருவை சேர்ந்த சரவணன் பணியாற்றி வந்தார். சரவணன் நாள் தோறும் மக்கள் மாநகராட்சிக்கு செலுத்தக் கூடிய சொத்து வரி, குடிநீர் வரி, பாதாளச் சாக்கடை வரி பணத்தில் இருந்து ரூ.4.66 கோடியை வங்கியில் செலுத்தாமல் போலியான ஆவணங்கள் தயார் செய்து, மாநகராட்சி அதிகாரிகள் போன்று  போலி கையெழுத்து போட்டும் கையாடல் செய்தார்.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சுப்பிரமணி பணம் கையாடல் செய்ததாக சரவணன் முறையாக கண்காணிக்காத  கண்காணிப்பாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ், இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரை  சஸ்பெண்ட் செய்தார். மேலும் கையாடல் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்பிடம்  மாநகராட்சி ஆணையர் மோசடி குறித்து புகார் மனு அளித்தார்.

புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல் கட்டமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு  சரவணனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் சரவணன் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இப்படி சரவணனிடம் நடத்திய விசாரணையில் மாநகராட்சியில் பணியாற்றும் சில அலுவலர்களுக்கு இந்த கையாடல் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று 08.08.24 குற்றப்பிரிவு போலீசார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கணக்குப் பிரிவு கண்காணிப்பாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ், ஆகியோரை கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2 ல் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கண்காணிப்பாளர் சாந்தியை நிலக்கோட்டையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட சிறையில் வில்லியம் சகாயராஜ் அடைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாநகராட்சியில் நடந்த மோசடியில் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இருப்பது மாநகராட்சியில் உள்ள அலுவலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்